வறுமையிலும் தர்மம் செய்ய வேண்டும்
வறுமையிலும் தர்மம் செய்ய வேண்டும் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
ரமலான் காலத்தில் தர்மம் மிகமிக அவசியம். உழைக்காமல் பிச்சை எடுப்பது தவறு தான். ஆனால், நடுத்தர வர்க்கத்திலோ, ஏழைகளிலோ சிலர் குழந்தைகளின் படிப்பு, நியாயமான குடும்பச் செலவு, நோய் போன்ற காரணங்களுக்காகச் சிலரிடம் தானம் கேட்கலாம். இந்த சமயத்தில் நாம் வறுமையில் தவித்தாலும் கூட, நம்மால் முடிந்ததை தானம் செய்ய வேண்டும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மகைரிக் என்பவர் ஏழு பேரீச்சை தோட்டங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நாயகம்(ஸல்) அவர்கள் தனக்காக வைத்துக் கொள்ளவில்லை. வக்பு சொத்தாக மாற்றிவிட்டார்கள். அதில் கிடைத்த வருமானத்தை ஏழை மக்கள் பெறும் வகையில் செய்துவிட்டார்கள்.
ஒருசமயம் நாயகம்(ஸல்) அவர்களின் நண்பர் ஒருவர் திருமணம் முடித்தார். ஆனால், விருந்தளிக்கும் அளவுக்கு அவரிடம் பணமில்லை. நாயகம்(ஸல்) அவர்கள், அவருக்கு தன் வீட்டில் இருந்த ஒருமூடை மாவைக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு உணவு தயாரித்து விருந்து வைக்கச் செய்தார்கள். அன்று இரவில், அண்ணலாரின் வீட்டில் உண்பதற்கு எதுவுமே இல்லை. அவர்கள் பட்டினியாகக் கிடந்தார்கள்.
இன்னொரு முறை நாயகம் அவர்களிடம் ஒரு வெளியூர்வாசி, "அண்ணலாரே! நீங்கள் தர்மம் செய்வதில் சாலச்சிறந்தவர் எனக் கேள்விப்பட்டு வந்தேன்,'' என்றார். நாயகம்(ஸல்) அவர்கள் அவருக்கு, இரண்டு குன்றுகளுக்கு இடையே மேய்ந்து கொண்டிருக்கும் தனது ஆடுகள் முழுவதையும் கொடுத்துவிட்டார்கள். இப்படி தர்மத்தின் தலைவராக வாழ்ந்தவர்கள் நபிகளார்.

No comments:
Post a Comment