
அறிவிப்பாளர்: ஜரீர்பின் அப்துல்லாஹ்(ரலி)
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் திருச் சமூகத்தில் ஒருநாள் காலை வேளையில் அமர்ந் திருந்தோம். அப்போது சிலர் வாட்களைத் தரித்துக் கொண்டு முரட்டுக் கம்பிளியைப் போர்த்திக் கொண்டு வந்தார்கள். அவர் களுடைய உடலின் பெரும்பகுதி நிர்வாணமாக இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் "முளர்' குலத்தைச் சேர்ந்தவர்கள். (அல்லது) அநேகமாக அவர்கள் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய வறுமைநிலையைக் கண்டு நபி(ஸல்) அவர்களின் திருமுகம் வருத்தத்தால் வாடி விட்டது! பின்னர் அண்ணலார் வீட்டிற்குள் சென்றார்கள். பின்னர் வெளியே வந்தார்கள். பிலால்(ரலி) அவர்களுக்கு பாங்கு சொல்லும்படிக் கட்டளையிட்டார்கள். (தொழுகை நேரம் வந்து விட்டிருந்தது) பிலால்(ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு தக்பீர் ("அல்லாஹு அக்பர்- இறைவனே பெரியவன்' என்று) கூறினார்கள். அண்ணலார் தொழ வைத்தார்கள். தொழுகைக்குப் பிறகு, உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் 4-ஆவது அத்தியாயமான அந்நிஸாவின் முதல் வசனத்தையும் 59- ஆவது அத்தியாயமான அந்நிஸாவின் அல்ஹஷ்ருடைய 18-20-ஆவது வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பின் கூறினார்கள். ""மக்கள் இறைவழியில் தர்மம் செய்ய வேண்டும். பொற்காசுகளையும் வெள்ளிக்காசு களையும் வழங்கிட வேண்டும். துணிமணிகளையும் வழங்கிட வேண்டும். கோதுமை ஒரு மரக்காலும் பேரீச்சம் பழம் ஒரு மரக்காலும் வழங்கிட வேண்டும்.'' இறுதியில் ""ஒருவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு பாதித்துண்டு இருந்தால், அதையாவது அவர் கொடுத்து விடட்டும்!'' என்று கூறினார்கள்.
இந்த உரையைக் கேட்ட பின்னர் அன்ஸார்களில் ஒருவர், கை கொள்ளாத அளவுக்கிருந்த பெரிய பை ஒன்றை தமது கரத்தில் எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர் மக்கள் ஒருவர் பின் ஒருவராக தர்மம் செய்ய ஆரம்பித்தார்கள். எந்த அளவுக்கென்றால், நான் தானியங்கள், துணிமணிகள் கொண்ட இரு குவியல்களைக் கண்டேன். மக்கள் இவ்வாறு தர்மம் செய்ததைக் கண்டு நபி(ஸல்) அவர்களின் திருமுகம் பொன்நிறம் பூசப்பட்டதைப்போல் பிரகாசிக்க லாயிற்று.
பின்னர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஒருவர் இஸ்லாத்தில் நல்லதொரு வழிமுறையைச் செயல்படுத்தினால் அதற்கான கூலி அவருக்குக் கிடைக்கும். இந்த நல்ல வழிமுறைப்படி பின்னர் செயல்படுபவர்களின் கூலி சிறிதும் குறைக்கப்படாது. இஸ்லாத்தில் தீய வழி முறை ஒன்றை நடைமுறைப்படுத்தினால், அதற்கான பாவம் அவனைச் சேரும். அந்த தீய வழிமுறையில் பின்னர் நடப்பவர்களின் பாவமும் அவனது வினைச் சுவடியில் எழுதப்படும். அந்தத் தீய வழிமுறைப்படி நடந்தவர்களின் பாவம் சிறிதும் குறைக்கப்படாது.'' (முஸ்லிம்)
விளக்கம்: இஸ்லாத்தில் இரு அடிப்படை அறிவுரைகள் உள்ளன.1. ஏகத்துவம் 2. இறைவனின் ஏழை அடியார்கள் மீது இரக்கமும் கருணையும் காட்டுதல். இதன் காரணத்தால் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் திருமுகம் வருத்தத்தால் வாடிவிட்டது. அந்த ஏழைகளுக்கு அவர்களின் உடை, உணவுக் கான வழிவகை பிறந்தவுடன் அவர்களுடைய திருமுகம் பொன் போலப் பிரகாசிக்கலாயிற்று!
அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் தமது உரையில் 4-ஆவது அத்தியாயமான அந்நிஸாவின் முதல் வசனத்தை ஓதினார்கள். அதன் பொருளாவது:
""மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கி னான். மேலும், அவை இரண்டின் மூலம்(உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமை களைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங் கள்! மேலும்<, இரத்த பந்த உறவு களைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக் கின்றான். ''இந்த வசனத்தில் அல்லாஹ் இரு விஷயங்களைக் கூறியுள்ளான்: ஏகத்துவம், மனித குல ஒருமைப்பாடு ஏகத்துவத்தின் பொருள், அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும் உரியவனா வான் என்பதாகும். இதன் பெயரே ஓரிறைக் கொள்கை(தவ்ஹீத்) ஆகும்.
மனித குல ஒருமைப்பாடு என்பதன் பொருள்: மாந்தர் அனைவரும் ஒரு தாய் தந்தையின் மக்களே! எனவே, அவர்களுடன் கருணையுடனும், பரிவிரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment